தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அதிமுக சட்டமன்றக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார் மனு அளித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு கட்சித் தாவலை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (அக்டோபர் 15) ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஏற்கெனவே அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளதாகவும், அவர்களைப் பணம் கொடுத்து இழுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் பேச்சுகள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மீண்டும் மனு அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.





















