வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முறைகேடாகவும், மொத்தமாகவும் பெயர் நீக்க விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவரின் பெயரை நீக்குவதற்கோ, புதிதாகப் பெயர் சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கோ படிவம் 7 (Form 7) பயன்படுத்தப்படுகிறது.
விசாரணையின்றி பெயர் நீக்க முடியாது
ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டதாலேயே அவரது பெயர் தானாக நீக்கப்படாது.
உரிய சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்படும் வாக்காளருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னரே விதிகளின்படி முடிவு எடுக்க முடியும் எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
வாக்காளர்கள் கவனத்திற்கு!
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கு படிவம் 8 பயன்படுத்தலாம்.





















