ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் பொருட்களின் விலையையும் உயர்த்தியிருப்பது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், வெண்ணெய் விலை கிலோவுக்கு சுமார் ரூ.90 முதல் ரூ.100 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். மேலும், 200 மில்லி மோர் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை உயர்வும் ஏழை மக்களைப் பாதிக்கும் எனக் கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, ஆவின் பொருட்களின் விலையை உயர்த்துவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம் என்று விமர்சித்த அன்புமணி, விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டே விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. புதிய விலைகள் அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருகின்றன.




















