தமிழகத்தில் இன்று (செப். 3) பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
மேலும், செப். 4-ம் தேதியும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


















