புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், படிக்கட்டில் நின்றிருந்த 10 பள்ளி மாணவிகள் சாலையில் விழுந்து காயமடைந்தனர். இதில் ஒரு மாணவியின் காலில் பேருந்து சக்கரம் ஏறியதாக கூறப்படுகிறது.
இன்று காலை பள்ளி மாணவிகள் வழக்கம்போல் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர். பேருந்து ரெங்கம்மாள்சத்திரம் அருகே சென்றபோது, அதற்குள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவிகள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.அப்போது படிக்கட்டில் நின்றிருந்த மாணவிகளை கீழே இறங்குமாறு நடத்துனர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவிகள் இறங்குவதற்கு தயக்கம் காட்டிய நிலையில், பேருந்தின் கதவு திடீரென திறந்ததாக கூறப்படுகிறது.கதவு திறந்ததால் நிலைதடுமாறிய மாணவிகள், ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து ஒருவர் பின் ஒருவராக சாலையில் விழுந்தனர். இதில் 10 மாணவிகள் காயமடைந்தனர்.இந்த விபத்தில் ஒரு மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மாணவிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தைக் கண்டித்து கிராம மக்கள் திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.


















