பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நூல் விலையும் உயர்ந்து வருகிறது. நடப்பு சீசன் தொடக்கத்தில் ரூ.54 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 11 மாதங்களில் ரூ.21 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.71 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பஞ்சு விலை உயர்வால் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.72 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சு உற்பத்தி குறையும் என்ற கணிப்பைப் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் அதிகளவில் பஞ்சைக் கொள்முதல் செய்து பதுக்கி, செயற்கையாக விலையை உயர்த்துவதாக நூற்பாலை உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நூல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பருத்திக் கழகம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பஞ்சு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், நூற்பாலைகளுக்கு நேரடியாகப் பஞ்சு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















