மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரின் சைக்கிள் ரோந்து மீண்டும் தொடங்கியுள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு சித்திரை வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை கண்காணிப்பதுடன், பக்தர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கவும் சைக்கிள் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் போலீசாரின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சைக்கிளில் ரோந்து செல்வதன் மூலம் குறுகலான வீதிகளிலும் எளிதாக கண்காணிப்பு மேற்கொள்ள முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


















