சென்னை,
கோவையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் அமுதன் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி தமிழ்நாடு சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
மேலும் இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகவும், கல்வி வளாகங்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கத்தை எவ்வித சமரசமும் இன்றி முற்றிலுமாக ஒழிக்க அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ., சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம். எல்.ஏ.,, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள்எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன, யார் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து காவல்துறை தீவிரமாக கண்காணித்து, அதன் பின்னணியில் செயல்படும் நபர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்களின் விற்பனை நடைபெறுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் எந்தவித அரசியல்தலையீட்டிற்கும் அல்லது சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது. சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம். எல்.ஏ., தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத சூழலை உருவாக்க அரசு, காவல்துறை மட்டுமின்றி பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் சட்டப்பேரவையில்கேட்டுக்கொண்டார்.


















