கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், அவதானப்பட்டி, சந்தூர், பர்கூர் உள்ளிட்ட 40 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை நம்பி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக மல்லிகை பூக்கள் முன்கூட்டியே பூத்துள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக வெளிச்சந்தைகளில் பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களில் 40 சரக்கு வேன்களில் சுமார் 50 டன் மல்லிகை பூக்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் 5 டன் பூக்கள் விற்பனையாகாமல் தேங்கியதாக கூறப்படுகிறது.
சென்ட் தொழிற்சாலைகளும் மிகக் குறைந்த விலையே நிர்ணயித்ததால், விவசாயிகளால் பூக்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. உள்ளூரில் அதிகளவில் விளைந்த பூக்களை விற்பனை செய்ய போதிய வசதிகள் இல்லாததாலும், உரிய விலை கிடைக்காததாலும் வேறு வழியின்றி காவேரிப்பட்டணம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் சுமார் 3 டன் மல்லிகை பூக்களை விவசாயிகள் கொட்டி அழித்தனர்.
இதனால் மல்லிகை விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். பருவம் தவறி முன்கூட்டியே பூக்கள் மலர்ந்துள்ளதால், வரவிருக்கும் பண்டிகை காலங்களில் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயி பாலாஜி தெரிவித்துள்ளார்.
எனவே, கிருஷ்ணகிரியில் அரசு சார்பில் சென்ட் தொழிற்சாலை அமைத்து, விவசாயிகளின் மல்லிகை பூக்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க முடியும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















