அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் இறுதிச்சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நாக்-அவுட் முறையில் நடைபெறும் இத்தொடரில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை அரையிறுதியில் எதிர்கொண்டார்.
அரையிறுதியின் கிளாசிக்கல் ஆட்டங்களில் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றார். குறிப்பாக, 2-வது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் விளையாடிய அவர், 55-வது நகர்த்தலில் கீமரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற ரேபிட் ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா ஆதிக்கம் செலுத்தினார். இரண்டு ரேபிட் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்ற அவர், ஒட்டுமொத்தமாக 17-3 என்ற முன்னிலையை பெற்றார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார்
இதையடுத்து, கிராண்ட் செஸ் டூர் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வெஸ்லி சோ அல்லது பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.


















