சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றும் ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், நவீன காதல், டேட்டிங் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசுகையில்,
இது நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடர் என்றும், நவீனமான மற்றும் விளையாட்டுத்தனமான பார்வையில் காதலை சொல்லும் படைப்பாக ‘#Love’ உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்கள் தங்களது கருத்துகள் சரி என்பதை நிரூபிக்க போட்டியிடும்போது, காதல் அவர்களது திட்டங்களையே மாற்றுகிறது என்றார்.

ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது,
‘#Love’ தொடரை உருவாக்கும் வாய்ப்பை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். ஒரு கதையை தொடக்கம் முதல் இறுதிவரை கொண்டு செல்வது மிகப்பெரிய பொறுப்பு என்றும், இந்தப் பயணத்தில் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதை கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
இயக்குநர் பாலாஜி மோகன் பேசுகையில்,
காதலை யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதால்தான் தொடர்ந்து காதல் கதைகளை சொல்லி வருவதாக தெரிவித்தார். ‘#Love’ தொடரில் காதல் குறித்த கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து கதையை உருவாக்கியுள்ளதாகவும், பார்வையாளர்கள் தங்களது அனுபவங்களுடன் தொடரை தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்றும் கூறினார்.
மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ்,
தனது கதாபாத்திரத்தின் உணர்வுகள் மற்றும் பலவீனமான பக்கங்கள் தன்னை அதிகம் கவர்ந்ததாக தெரிவித்தார். காதல் உறவில் கெமிஸ்ட்ரியை விட காம்பாட்டிபிலிட்டி முக்கியம் என்றும் தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.

தாரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி,
இந்த கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறினார். தாரா கதாபாத்திரத்துடன் தன்னை பெருமளவு ஒப்பிட முடியும் என்றும், அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார். காதலில் முதலில் கெமிஸ்ட்ரி உருவாகி, அதன் மூலம் காம்பாட்டிபிலிட்டி நோக்கி உறவு செல்லும் எனவும் அவர் கூறினார்.
‘FOUND’ மற்றும் ‘Find My Bae’ ஆகிய டேட்டிங் ஆப்களைச் சுற்றி நகரும் இந்தக் கதையில், மற்றவர்களுக்கான சரியான துணையை தேடிக்கொடுக்கும் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பதும், அவர்களுக்கிடையே உருவாகும் உறவும் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ள இந்தத் தொடருக்கு ஷரதா சுப்ரமணியன், ஸ்வேதா சக்ரவர்த்தி ஆகியோர் இணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காதல், நட்பு, குடும்பம், லட்சியம் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களை பேசும் ‘#Love’ வெப் சீரிஸ் அக்டோபர் 2-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.





















