தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவைக் குறைக்கும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்தத் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தகுதியான குடும்பங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளதாகவும், இதற்காக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.4,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுமையை குறைத்து, சமையல் எரிவாயு செலவில் நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலவச சிலிண்டர் திட்டத்திற்கான தகுதி, பயனாளிகள் பட்டியல் மற்றும் பணம் வழங்கப்படும் நடைமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















