இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய யுபிஐ (UPI) தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வளர்ச்சியையும் பரவலான பயன்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “யுபிஐ-ன் பிரம்மாண்டமும், பரவலும் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று” என்று தெரிவித்துள்ளார். மேலும், யுபிஐ தங்களது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பயன்பாடு குறித்த அனுபவங்களை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2016-17 நிதியாண்டில் சுமார் 1.78 கோடியாக இருந்த ஆண்டு யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025-26 நிதியாண்டில் 24,162 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
யுபிஐ மூலம் தனிநபர்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றம் மட்டுமின்றி, வணிக நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கட்டணங்களும் எளிதாகியுள்ளன. இதன் மூலம் வங்கிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான அணுகல் நாடு முழுவதும் விரிவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பின் முக்கிய தூணாக யுபிஐ உருவெடுத்துள்ளதாகவும், அதன் பயன்பாடு இந்தியாவைத் தாண்டி பல்வேறு நாடுகளுக்கும் விரிவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐயின் 10 ஆண்டு பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அதன் வளர்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ளார். அன்றாட பணப் பரிவர்த்தனைகளை வேகமாகவும் எளிமையாகவும் மாற்றியுள்ள யுபிஐ, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.





















