ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.500-லிருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரயில் பெட்டிகள், நடைமேடைகள், தண்டவாளங்கள், காத்திருப்புப் பகுதிகள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை வீசுபவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படும். தூய்மையைப் பாதுகாக்கவும், சுகாதாரச் சீர்கேடுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைச் சுத்தமாக வைத்திருக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், விதிமீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.


















