தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, தமிழ்நாடு அரசின் நேரடி பணி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இந்த நடைமுறை தொடர்பாக ஏற்கனவே அமலில் இருந்த 2010-ம் ஆண்டு சட்டத்தில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 1-ம் வகுப்பு முதல் அரசு பணிக்குத் தேவையான கல்வித் தகுதி வரையிலான படிப்பை முழுமையாக தமிழ்வழியில் பயின்றவர்களே இந்த முன்னுரிமையைப் பெற தகுதியுடையவர்கள். பிற மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்துவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடியாக பள்ளியில் சேர்ந்து தமிழ்வழியில் படித்தவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்வழியில் படித்து பின்னர் தமிழ்நாட்டில் தொடர்ந்து தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களும் விதிகளுக்கு உட்பட்டு முன்னுரிமை பெறலாம்.
இந்த முன்னுரிமையைப் பெறும் விண்ணப்பதாரர்கள், தங்களது கல்வித் தகுதி வரையிலான படிப்பை தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே தமிழ்வழி முன்னுரிமையின் அடிப்படையில் அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீண்டும் அதே ஊதிய நிலை அல்லது அதற்கு இணையான முன்னுரிமை காலியிடங்களுக்கு இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடியாது என்றும் சட்டத் திருத்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் இனி புதிதாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.





















