தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி (சனிக்கிழமை) eKYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இதுவரை eKYC செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் eKYC நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீதம் eKYC பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
எனவே, இதுவரை ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், ஆகஸ்ட் 29-ம் தேதி தங்களது பகுதி நியாயவிலைக் கடைக்குச் சென்று eKYC பதிவை தவறாமல் மேற்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.





















