சென்னை
சென்னை மாநகராட்சி 14-வது மண்டலத்தில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. எங்கள் சொந்த செலவிலேயே மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுவதாக சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் குற்றம் சாட்டினார்.
சென்னை மாநகராட்சி 14வது மண்டலக்கூட்டம் உள்ளகரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த மண்டலக்குழு தலைவர், ஆணையர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மாமன்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் பேசுகையில், 14-வது மண்டலத்தில் மாதம் மாதம் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு மனுக்களை தொடர்ந்து கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக அம்மா உணவகத்தில் தற்போதுள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு நிதி ஒதுக்கி தீர்வு காண வேண்டி பலமுறை தீர்மானம் வைத்தோம். ஆனால் அதனை நிராகரித்து விடுகிறார்கள்.
மழைக்காலம் நெருங்குகிற இந்த கால கட்டத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எதுவும் இதுவரை சரிவர எடுக்கவில்லை. எங்கள் சொந்த செலவிலேயே ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் பணிகளை செய்து வருகிறோம். 14-வது மண்டலம் மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது.
இவ்வாறு சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் தெரிவித்தார்.
அப்போது 191-வது வார்டு மாமன்ற கழக உறுப்பினர் ஜெ.எல்.லஷ்மி, 190-வது வார்டு மாமன்ற கழக உறுப்பினர் பி.சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.


















