கோவை
கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கிடப்பில் போட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்து மனு அளித்த பிறகு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களக்கு பேட்டி அளித்தார். அபபோது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் அறிவிப்பின் படி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என கடிதம் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் வழங்கியுள்ளோம். அந்த கோரிக்கையில் அதிகமாக முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அவசியமான கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகிறது. முந்தைய ஆட்சியில் சாலைகள் அனைத்தும் எவ்வளவு சிறப்பாக இருந்தது என அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் சாலைகள் அனைத்தும் மோசமாக உள்ளது.
இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலாவதாக அளித்துள்ளோம். மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக பைப் லைன் தோண்டப்பட்டதால் சாலைகள் சேதமடைந்து மழை காலத்தில் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த அரசு முதலில் சாலைகளை சரி செய்ய வேண்டும்.
கழக ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் கோரிய 500 சாலைகளை இந்த அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாலங்கள் முடிக்கப்பட வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டம் குறித்து கோரிக்கையாக அளித்துள்ளோம்.
தற்போது குடிநீர் விநியோகம் செய்ய 10,15 நாட்கள் ஆகிறது. அணைகளில் தண்ணீர் இருந்தும் அதனை சரியாக விநியோகிப்பதில்லை. கழக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்ட நிலையில் அந்த திட்டங்களை எல்லாம் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.
கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஏதோ உள் நோக்கத்தோடு அப்பணியை நிறுத்தி விட்டனர்.
அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளோம். வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திட்டம் நிறைவேறினால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்தார்.
















