ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் நேரில் மரியாதை செலுத்தினர்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத் துணைத் தலைவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றடைந்தார். அங்கு முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் விடுதலைக்காகவும், சமூக நலனுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





















