தமிழ்நாட்டில் H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 பேராக இருந்த பாதிப்பு, தற்போது 339 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் மற்றும் தசை வலி, தலைவலி, கடுமையான சோர்வு, குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்து உள்ளவர்கள் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.





















