கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 415 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கே திரும்பி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் புறப்பட்டு சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு, 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, எஞ்சின் 1-ல் எண்ணெயின் அளவு வேகமாக குறைந்து வருவதை விமானிகள் கவனித்தனர். இதையடுத்து நிலைமையை ஆய்வு செய்த விமானிகள், அபுதாபி பயணத்தைத் தொடராமல் கொச்சிக்குத் திரும்ப முடிவு செய்தனர்.
விமானம் கொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, எஞ்சின் எண்ணெய் அழுத்தம் ஆபத்தான அளவுக்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு நடைமுறைகளின்படி எஞ்சின் 1 நிறுத்தப்பட்டது. ஒரு எஞ்சின் மட்டுமே இயங்கிய நிலையில் விமானிகள் விமானத்தை கொச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த பயணிகளுக்கு நிலைமையின் தீவிரம் முழுமையாக தெரியாத நிலையில், விமானிகள் மற்றும் விமானக் குழுவினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விமானத்தில் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.





















