நெல்லை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அதேபகுதியில் உள்ள சேர்ந்த முனீஸ்வரன் (27) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் காட்டுப்பகுதிக்கு முனீஸ்வரன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது நண்பர்களான நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி (27), கீழ வீரராகவபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (27) ஆகியோரும் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவருக்கு மரண தண்டனையும், மற்ற இருவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















