சென்னை: தமிழகத்தில் புதிய நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 160 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைப்பவர்களுக்கு ரூ.10 வழங்கப்படுகிறது. மேலும், ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்களுக்கு கியூஆர் குறியீடு மூலம் பணமில்லா பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறைகளால் பணிச்சுமை அதிகரிப்பதாகக் கூறி, கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க வேண்டும், காலி பாட்டில்களைச் சேகரிக்கத் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1-ம் தேதி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, முன்னறிவிப்பின்றி கடைகளைத் திறக்காத 960 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர்களில் 160 பேரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், தொடர்ந்து கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.





















