சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (செப்.22) விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார்.
சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் உணவு பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டதுடன், வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதல் நாளான இன்று மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
முன்னதாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதால், பள்ளி காலை உணவுத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.





















