மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (செப்.19) வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் களத்தில் உள்ளனர்.
மதுராந்தகத்தில் 28 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் இறுதியாக 27 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் இரு தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் களம் உறுதியாகியுள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.





















