சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (AAI) வேறு நிறுவனத்துக்கு மாற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியதாக வெளியாகியுள்ள தகவலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பல மாநில அரசுகள் விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செயல்பாடு, உட்கட்டமைப்பு அல்லது பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்பதே தினகரனின் நிலைப்பாடு. பொதுத்துறை நிறுவனத்தின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.





















