விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையையொட்டி, பொதுமக்களின் பயண வசதிக்காக இன்று முதல் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் பணியிடங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் திரும்பும் வகையிலும் செப்.15-ம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்காக 765 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















