கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மகாமகத் திருவிழா, வரும் 2028-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மகாமக விழா பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் சுமார் 70 முதல் 90 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் ரூ.600 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ ஆலயங்கள் என மொத்தம் 17 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால், சாலைப் போக்குவரத்து வசதிகள், மாநகராட்சி சார்பிலான சுகாதாரப் பணிகள், நீர்வளத்துறை மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.





















