தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறிப் பொருட்களை வாங்குமாறும், நெசவாளர்களுக்கு ஆதரவான வீடியோக்களை பகிருமாறும் மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கியது. இந்த இயக்கம் நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைத்து, தன்னம்பிக்கையின் சின்னமாக மாறியது.
சிறிய வீடுகளில் இருந்து பணியாற்றி, பலவகையான கைத்தறித் துணிகளை உருவாக்கும் நாட்டின் நெசவாளர்களைக் கவுரவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த நிகழ்வு. குறைந்தது ஒரு கைத்தறிப் பொருளையாவது வாங்கி, அதை விளம்பரப்படுத்தும் வீடியோ எடுத்து, மற்றவர்களையும் இத்துறைக்கு ஆதரவளிக்கத் தூண்டும் வகையில் அதை மக்கள் இணையத்தில் பகிர வேண்டும்.
தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும். மக்களின் ஆதரவு, இந்திய நெசவாளர்களின் திறமையையும் கைவினைத்திறனையும் உலகிற்கு வெளிக்காட்ட உதவும். இந்தியாவின் கைத்தறி பொருட்களை பிரபலப்படுத்துவோம். அதை பயன்படுத்த மறக்க கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



















