சேலம்,
சேலம் பட்டை கோவில் அருகே வட மாநிலத்தை சேர்ந்த கும்பலால் மளிகைக் கடைக்காரர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ஜெயராமன். வட மாநில வியாபாரியான இவர், நேற்று அதிகாலை வழக்கம் போல கடையை திறந்துள்ளார். அப்போது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வந்த 6 பேர் கொண்ட வட மாநில கும்பல் அவரிடம் பேச்சு கொடுத்தனர்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆறு பேரும் அதிரடியாக ஜெயராமனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துச் சென்று ஏற்கனவே கடையின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். கடையில் பொருள் வாங்க வந்தவர்கள், இதைக்கண்டு ஏதும் புரியாமல் திகைத்தனர்.
இதுகுறித்து ஜெயராமனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் அடிப்படையில் விரைந்து வந்த சேலம் மாநகர காவல்துறையினர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் ஜெயராமனை இழுத்துச்செல்வது உறுதியானது.
இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில் போட்டி காரணமாக இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட மாநில வாலிபரை சேலத்தில் அதுவும் ஆள்நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் காட்சியை போல் சிசிடிவி காட்சிகள் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


















