அம்பத்தூர்
பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை விரட்டியடிக்க சூளுரை ஏற்போம் என்று மே தின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி சூளுரைத்துள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் புழல் ஒன்றியம் புள்ளியின் ஊராட்சியில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், தலைமை கழக பேச்சாளர்கள் தண்டரை மனோகரன், ராஜகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதி தந்து இன்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் தி.மு.க.வால் மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக மாதம்தோறும் மின் கட்டணம், நகை கடன் தள்ளுபடி நீட் தேர்வு ரத்து என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக தொடர் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல்வேறு துன்பங்களுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். இது தி.மு.க ஓராண்டு சாதனை அல்ல. தமிழக மக்களின் ஓராண்டு வேதனையாக உள்ளது.
கழகம் ஆட்சியில் இருந்த போது இந்த தொகுதிக்கு மின்விளக்கு, தரமான தார் சாலைகள், குடிநீர் வசதி, என அனைத்துமே செய்து கொடுத்தோம். இருந்தாலும் மக்கள் தி.மு.க.வின் கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து விட்டு இன்று மிகவும் அவதிப்படுகின்றனர். ஆனால் அதே மக்கள் இன்று தேர்தல் வந்தாலும் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். ஏனென்றால் ஓராண்டிலேயே தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. எனவே பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசை விரட்டியடிக்க நாம் இந்த மே தினத்தில் சூளுரை ஏற்போம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி பேசினார்.


















