திண்டுக்கல்
கழக அமைப்பு தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட தலைமை கட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய தொகுதிகளில் உள்ள கிளை கழகம், பேரூர் கழகம், நகர கழகம், நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ரா.கோபாலகிருஷ்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-
ஜனநாயக முறைப்படி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் கிளை கழகம், பேரூர் கழகம், நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கான உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்டமாக 40 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் மட்டும் 21 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியாக இருந்ததை காட்டிலும் எதிர்க்கட்சியான பிறகு கழக நிர்வாகிகள் இடையே தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெறும் 21 இடங்களையும் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


















