தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண வசதியை மேலும் விரிவுபடுத்தும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அக்டோபர் 2-ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். புதிய திட்டத்தின்படி, Express, LSS, Deluxe, புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படுகிறது. மொத்தம் 12,692 பேருந்துகள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
7 போக்குவரத்துக் கழகங்களின் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், அதாவது 69 சதவீத பேருந்துகள் இந்தத் திட்டத்தில் இடம்பெறும். மொத்தம் 1,94,649 நடைகளில் 1,65,312 நடைகள் இதன் கீழ் இயக்கப்படும். இதன் மூலம் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான மின்னணு பயணச்சீட்டு இயந்திர இணைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் செப்டம்பர் 25-க்குள்ளும், சோதனை ஓட்டம் செப்டம்பர் 27-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2 முதல் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் மாணவிகள் கல்லூரிகளுக்கும், மகளிர் பணியிடங்கள், மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்காகவும் கூடுதல் வகை அரசு பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.





















