பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலமன் பாப்பையா தனது பேச்சாற்றல், நகைச்சுவை மற்றும் எளிமையான தமிழ் நடையால் தமிழக மக்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்றவர். பட்டிமன்றங்கள் மூலம் தமிழ் இலக்கியம், திருக்குறள் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
2000-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றிருந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருந்தார்.
தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பேச்சாளராகவும் பங்கேற்று நீண்ட காலமாக தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அவரது மறைவு செய்தி அறிந்த தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





















