பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 564-ஐ சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ள நிலையில், “முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அரசாணை எப்படி வெளியானது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சருக்குத் தெரியாமல் அரசாணை வெளியிடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டிருந்தால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.
மேலும், புதிய தலைமைச் செயலகத்துக்காக மீனவர் குடியிருப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்றும், சென்னையில் உள்ள மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பட்டினப்பாக்கம் விவகாரத்தில் தங்களது எதிர்ப்பு தவெக அரசுக்கு எதிரான அரசியல் நடவடிக்கை அல்ல என்றும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் நலனைப் பாதிக்கும் முடிவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்றும் பெ.சண்முகம் கூறினார்.





















