சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொலைநோக்குப் பார்வையற்ற முடிவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடந்த 3-ஆம் தேதி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கான இடமாக பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்புமணி, பட்டினப்பாக்கம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். சாந்தோம் சாலை, பசுமைவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் நெரிசல் மேலும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய தலைமைச் செயலகம் அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்றால், சென்னைக்கு வெளியே 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.





















