சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் விசாரணையின்போது தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மடப்புரம் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் மீது நகைகள் திருடியதாக பெண் ஒருவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், வேறு இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாகவும், தோப்புப் பகுதியில் அவரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் படுகாயமடைந்த அஜித்குமார் பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





















