தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றை முறையாக மூடி வைக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















