தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகள் தொடர்பாக மொத்தம் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் பணிகள், நிதி ஒதுக்கீடு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், ஊராட்சிகள், வணிக எளிதாக்கல், மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட பல்வேறு திருத்த மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.
செப்டம்பர் 8-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு 4 நாட்களுக்குள்ளும், மேலும் 5 மசோதாக்களுக்கு 5 நாட்களுக்குள்ளும் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்ட 12 மசோதாக்களும் தற்போது சட்டங்களாகியுள்ளன.





















