மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.
தேனியைச் சேர்ந்த பாரதிதாசன் மலேசியாவில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். தனக்கான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் அரசியல் விவாதமாக மாறியது.
இதுகுறித்து சமூக நீதித்துறை முன்னதாக அளித்த விளக்கத்தில், பாரதிதாசனுக்கு முதலாமாண்டு படிப்புக்கு ரூ.36 லட்சமும், இரண்டாம் ஆண்டுக்கு ரூ.12 லட்சமும் என மொத்தம் ரூ.48 லட்சம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. கூடுதல் செலவினக் கோரிக்கை தொடர்பாக அவர் பயிலும் பல்கலைக்கழகத்திடம் விவரங்கள் கோரப்பட்டதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது அயலக கல்வி உதவித்தொகையாக மேலும் ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக ரூ.12 லட்சம் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















