தமிழ்நாட்டில் செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து டெங்கு மற்றும் ‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை 17,277 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப்.16-ல் 283 பேர், 17-ல் 244 பேர், 18-ல் 253 பேர், 19-ல் 224 பேர் மற்றும் நேற்று முன்தினம் 228 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் செப்.21 அன்று 79 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை தவிர செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது.
இதற்கிடையே, ஸ்கரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சலால் இதுவரை 4,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு, மருந்து தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.





















