கயாது லோகர் ஜோடி – ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கம்
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படமான ‘SK27’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்குகிறார்.

டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன்–கயாது லோகர் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்தியாசமான கதைக்களங்களையும், விறுவிறுப்பான திரைக்கதைகளையும் உருவாக்குவதில் கவனம் பெற்ற ராம் குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் படத்தொகுப்பையும், ராஜேஷ் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். பிரவீன் ஆடை வடிவமைப்பாளராகவும், ஸ்டீவன் குமார் சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
இதற்கிடையே வெளியாகியுள்ள ‘SK27’ அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவப்பு நிற கார் ஒன்றைச் சுற்றி ஏராளமான மக்கள் திரண்டு ஓடி வரும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகை மற்றும் ஒளி அமைப்புகளுடன் சிவப்பு, பச்சை, கருப்பு நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறதா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், ‘SK27’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





















