தமிழ்நாட்டில் வெள்ளை சர்க்கரையின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பொதுமக்கள் மீது குறைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்து தற்போது ரூ.75 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் தீபாவளி காலத்தில் சர்க்கரை விலை கிலோ ரூ.100-ஐ எட்டும் அபாயம் இருப்பதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை விலை உயர்வுக்கு கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருவதும் முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கு முன்பு சுமார் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2025ஆம் ஆண்டில் 5 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளதாகவும், சர்க்கரை உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.





















