சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த கோகிலா (65), விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்துள்ளார். அப்போது விநாயகருக்கு 7 சவரன் தங்க நெக்லஸை அணிவித்து, பூமாலை போட்டு வழிபட்டுள்ளார்.
பூஜை முடிந்த பின்னர், வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்துச் சென்று அருகே வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலையின் அருகில் வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
மறுநாள் காலையில்தான் விநாயகருக்கு அணிவித்த 7 சவரன் தங்க நகையை கழற்றாமல் சிலையுடன் விட்டுவந்தது கோகிலாவுக்கு நினைவுக்கு வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, சிறிய விநாயகர் சிலையையும் நகையையும் காணவில்லை.
பதறிப்போன கோகிலா உடனே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் களத்தில் இறங்கி விசாரித்ததில், பிரதான சாலையில் இருந்த பெரிய சிலைகளுடன் சேர்த்து கோகிலாவின் விநாயகர் சிலையும் பள்ளிக்கரணை ஏரியில் கரைக்கப்பட்டது தெரியவந்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார், உள்ளூர் இளைஞர்களின் உதவியோடு ஏரியில் இறங்கி தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சேறும் சகதியுமாக இருந்த ஏரியில் தீவிரமாகத் தேடி, இறுதியில் அந்த 7 சவரன் தங்க நகையைப் பத்திரமாக மீட்டெடுத்தனர்.
மீட்கப்பட்ட நகையை காவல்துறையினர் கோகிலாவிடம் ஒப்படைத்தனர்.





















