‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தற்போது தனது அடுத்த படைப்பான ‘நந்தன் 2’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் முதல் டைட்டில் லுக் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா. சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். வெளியான டைட்டில் போஸ்டர், வழக்கமான சினிமா போஸ்டர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருப்பு-வெள்ளை பின்னணியில், ஒரு சிறுமியின் கையில் இருக்கும் உலோகப் பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பியிருப்பதும், அதன் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றிருப்பதும் போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ள ‘நந்தன் 2’ என்ற தலைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.
‘நந்தன்’ படத்தைவிட இன்னும் அழுத்தமான சமூக அக்கறை கொண்ட படைப்பாக ‘நந்தன் 2’ உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘நந்தன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரா. சரவணன் இயக்கும் புதிய படைப்பு என்பதால், ‘நந்தன் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த முழுமையான விவரங்கள் அடுத்தடுத்த அப்டேட்களில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





















