மதுரை தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி மதுரை எய்ம்ஸ் வளாகத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளில் 57 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில்: “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பணிகள் விரைவாக முடிக்கப்படாமல் நீண்ட காலமாகத் தாமதமாகி வருகிறது.
எனவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான புறநோயாளிகள் பிரிவு 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 5 பேட்ச் மாணவர்கள் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் தங்கியிருந்த நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.





















