தமிழகத்தில் நடைபெறும் தவெக ஆட்சியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரீல்ஸ், ரீல் விடுவதைத்தான் தவெக ஆட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது” என்று விமர்சித்தார்.
முதல்வர் விஜய் லண்டன் சென்றது தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்திலேயே அலுவலகம் கொண்டுள்ள மதர்சன் நிறுவனத்துடன் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதன் நோக்கம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்றாரா அல்லது இன்பச் சுற்றுலா சென்றாரா என மக்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளில் மக்கள் பிரச்சினைகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதிலாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேரத்தை வீணடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் கூறும் நிலையில், மின் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக மின்சாரம் வாங்கப்படும் என தெரிவிப்பது முரண்பாடாக இருப்பதாக எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வால் ஏழை. எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தின் கடன் நிலை அதிகரித்துள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
“மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல், பேட்டிகளும் ரீல்ஸ்களுமே தவெசு ஆட்சியின் செயல்பாடுகளாக உள்ளன” என்றும் அவர் விமர்சித்தார்.





















