மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (செப்டம்பர் 17) நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பயண வசதிக்காக தாம்பரம்–மதுரை இடையே இன்று முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வே அறிவிப்பின்படி, செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மெமு ரெயில், செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மறுமார்க்கமாக, செப்டம்பர் 17-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு மெமு ரெயில், அன்று இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரெயிலும் முன்பதிவில்லாத சேவையாக இயக்கப்படுகிறது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களின் பயண நெரிசலை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரெயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





















