மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.சுதன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்ததால், மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி, அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இவ்வாறு பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவுக்கான பாதுகாப்புத் தொகையை வசூலிக்க உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்படும் வரை இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு பதவியை ராஜினாமா செய்யும் உரிமை இருப்பதாகவும், தேர்தல் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















