தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (செப். 9) தொடங்கியது.
வேட்புமனுக்களை செப்டம்பர் 9 முதல் 16-ஆம் தேதி வரை, தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செப்டம்பர் 17-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தாராபுரம் , மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கத் தயாராகி வருவதால், இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.





















